புதன், 8 பிப்ரவரி, 2012

மக்களிடம் எடுபடாத அரசு கேபிள் டிவி.. விலகும் ஆபரேட்டர்கள்!

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் மக்கள் விரும்பிப் பார்க்கும் சன் டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் இல்லாததால், மக்களிடையே இந்த சேவை எடுபடவில்லை. இதனால் அரசு கேபிள் டிவியில் மிக ஆர்வமாக இணைந்த ஆபரேட்டர்கள் அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.


தூத்துக்குடியில் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பை நிறுத்திவிட்டு, பழையபடியே தங்கள் ஒளிப்பரப்பை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொடர்ந்து வருகின்றனர். அதே போல நாகை, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கேபிள் ஆபரேட்டர்கள், மாவட்ட கலெக்டர்களை சந்தித்து இதே புகார்களை அடுக்கியுள்ளனர்.இந் நிலையில் அரசு கேபிளில் சேர முன்வராத ஆபரேட்டர்களை மிரட்டும் வேலைகளும் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


முதல்கட்டமாக 70 இலவச சேனல்களைக் கொண்டு இந்த ஒளிபரப்புச் சேவை தொடங்கும் என்றும், கட்டண சேனல்களை சேர்த்து பின்னர் 90 சேனல்கள் அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் சன் டிவி சேனல்களோ, ராஜ் டிவி சேனல்களோ, விஜய் டிவியோ அதில் இல்லை


தமிழ் சேனல்களை பொருத்தவரை சன் குழும சேனல்களே முதலிடத்தில் உள்ளன. இந்தச் சேனல்கள் தெரியாததால், அவற்றில் வரும் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இல்லத்தரசிகள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர்களை துளைத்தெடுக்கின்றனர், ஏன் சன் டிவி தெரியவில்லை என்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக